Saturday, 18 November 2017

Theeran - தீரன் அதிகாரம் ஒன்று


மீண்டும் இந்த வாரம் ஒரு அருமையான படம் பார்த்த சந்தோசம் , சில பல வேலைகளால் நேற்று தான் இந்த படத்தை பார்த்து லேட்டா  விமர்சனம் எழுதுறேன்,
அறம் தொடர்ந்து இந்த வாரம் தீரன்னு தமிழில் தொடர்ச்சியா நல்ல படங்கள் வருஷ கடைசியில வருது, அதுவும் சதுரங்க  வேட்டை இயக்கியவரின் , இரண்டாவது பதிவு இந்த படம் 

ஒரு படம் அதுவும் கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரணும் , அதுவும் உண்மை கதை எடுத்து எந்தளவுக்கு விறுவிறுப்பாக தரணுமோ அதையெல்லாம் சரியாக கொடுத்து சீட்டு நுனிக்கு வரவச்சி நம்மை பெருமூச்சு  விடவைச்சுட்டார் டைரக்டர் வினோத் .

படம் என்னமோ சாதாரணமா ஒரு commercial படம் போல தான் ஆரம்பிச்சது , அட இது வழக்கமான ஒரு போலீஸ் கதை , சும்மா காதல் , ஒரு டூயட் , அப்பறம் ஹீரோயின்க்கு முக்கியத்துவம் தராத கதை போல தான் இருக்கும்ன்னு முதல் 20 நிமிஷம் தோணுச்சு , அந்த காதல் காட்சிக்கு நடு நடுவே கார்த்தி போலீஸ் training காட்டுவது எல்லாம் நல்லா இருந்தாலும், காதல் டியூஷன் எடுப்பது எல்லாம்  கொஞ்சம் bore ஆகா தான் feel ஆச்சு  , ஆனால் கதைக்குள்ள  ஒருபடி எடுத்து வச்ச உடனே சும்மா பிச்சிகிட்டு போகுது படம் , அபப்டி ஒரு வேகம், அதுவும் அந்த வில்லன்கள் முகங்கள் தெரிஞ்சதுக்கு பிறகு அவங்க வேட்டை ஆரம்பிக்கும் போது , அடேய் யாருடா நீங்க? அந்த வில்லன்களை  நாமே அடிச்சி நொறுக்கணும் என்ற ஒரு எண்ணம் நமக்கு தோன்றாமல் இருக்காது , அப்படி ஒரு கொடூரத்தை காட்டுவாங்க 

ஒரு படம் பார்த்தா அதோட நாம் ஒன்றிவிடவேண்டும் , ஒரு காட்சி ஆரம்பித்து  முடியும் போது ஒரு surprise இருக்கணும் , அது இந்த படத்தில இருக்கு, உதாரணத்துக்கு சில காட்சிகள் சொல்லணும்ன்னா , போலீஸ் நுழைய முடியாத கிராமத்தில் கார்த்தி போவது அங்கே நடக்கும் சண்டைகள் , ஒரு சந்தையில் ஒருவனை கைது பண்ணுவது , முக்கியமா பஸ் சண்டை நிச்சயமா அந்த பஸ்ல இருக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும் , அதை விறுவிறுப்பாக படம்பிடித்த கேமராமேன் சத்யன்  , ஸ்டண்ட்மென் திலிப் சுப்ராயன் , எடிட்டர் சிவன் நந்தீஸவரன்  இவங்க எல்லோருக்கும் பெரிய  சலுயூட்டே போடணும் , கிளைமாக்ஸ்ல் நடக்கும் இரவு சண்டை அதில் இருக்கும் brilliance காட்டி இருப்பது சூப்பர் .

படத்தோட கதையில டைரக்டர் நல்ல ஆராய்ச்சி பண்ணிதான் எழுதி முடிச்சி இருப்பர் , ஏன்னா ஒரு போலீஸ் எப்படி விசாரிப்பாங்க , எந்தளவுக்கு கஷ்டப்படுறாங்க , ஒரு கை ரேகை நிபுணர் எப்படி பார்ப்பாங்க , முக்கியமா இந்த கொள்ளை கும்பல் எப்படிபட்டவங்க , அவங்க பின்னணி என்ன , அதுவும் வரலாற்றில் குற்ற பரம்பரை பற்றி எல்லாம்  எடுத்து கூறுவது  நல்ல detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு காட்டுது, ஆனால் நிறைய விஷயங்கள் டக்கு டக்குன்னு கூறும் போது ஒரு சாதாரண ரசிகனுக்கு என்ன சொன்னாங்க அப்படின்னு கேட்க தோணும், ஏன்னா அந்த பரம்பரை பெயர்கள் , வில்லன்களின் பெயர்கள் , எந்த ஊருல இருந்து போறாங்க அது எல்லாம் நமக்கு மனசில் பதிய கொஞ்சம் time ஆகும் , அதனால் அந்த விஷயங்கள் எல்லாம் சொல்லும் போது நாம் உற்று கவனிக்கணும் .detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு சொல்லியத்துக்கு உதாரணம் படத்தின் கதை 90களில் இருந்து 2000 வரை நடப்பதால் , அந்த மொபைல் எல்லாம் அந்த periodல் வந்த நோக்கியா basic phone காட்டுறாங்க , அது காட்டுவது பெரிய விஷயம் இல்ல , ஆனால் ஒரு காட்சியில் ஒருவர் அதை கழுத்தில் தொங்கவிட்டு இருப்பர் , அது போல தான் வயதில் பெரியவங்க அந்த மொபைல் அந்த periodல் யூஸ் பண்ணியிருப்பாங்க .

டைரக்டர் வினோத் படத்தின் கதையை layer layer ஆகா பிரிச்சி ,ஒரு ஒரு காட்சியின் முடிவிலும் கதையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போவது தான் ப்ளஸ் , இதே தான் அவர் சதுரங்க வேட்டையிலும்,இதிலும்  செய்து இருக்கிறார், ஹீரோ கார்த்தி நிச்சயமாக இந்த படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக்கிங் பாயிண்ட் படம் தான் இது , அவரை கார்த்தியாக பார்க்க முடியவில்லை , அந்த தீரனாக தான் தெரிகிறார் , ராஜஸ்தானில் நடக்கும் சம்பவம் எல்லாம் அவர் வாழ்ந்தாகவே தெரிகிறது , போஸ் வெங்கட் நல்ல supporting கேரக்டர் நல்லா செய்து இருக்கிறார் , படத்தின் இன்னொரு மிக பெரிய ப்ளஸ் ஜிப்ரான் இசை , மனுஷன் பிச்சி உதறிட்டார் , இந்த வருஷ கடைசியில் அவருக்கு தொடர்ந்து வெற்றியாக வரும் போல , போனவாரம் அறம் , இந்த வாரம் தீரன் , அடுத்த வாரம் சென்னை டு சிங்கப்பூர் (எப்படி இருக்குன்னு பார்ப்போம்).

படம் முடியும் போது அந்த case உண்மை நிலவரம் என்ன? அதில் வேலை பார்த்தவங்க நிலைமை என்ன என்று எல்லாம் சொல்லி முடிக்கும் போது , அட பாவம்யா அந்த போலீஸ்காரங்க , எல்லா போலீஸ்காரர்களை தப்பு சொல்ல கூடாது என்று தோன்றாமல் வெளியே வர முடியாது .

மொத்தத்தில்  தீரன் ரொம்ப தீர்க்கமானவன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Saturday, 11 November 2017

Aram - அறம்

இது என்னோட 150வது விமர்சனம் ,  ஒரு அருமையான படத்தை 150வது விமர்சனமாக எழுவதில்  எனக்கு ரொம்ப சந்தோசம் . மேலும் என்னை ஆதரிக்கும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் .

முதல் வரியிலே நான் இந்த படத்தை பற்றி சொல்லிடுறேன் , நானே இந்த படம் ஒரு நாள் தள்ளி பார்த்து விமர்சனம் போடுறேனே ஒரு வருத்தம் , எத்தனையோ மொக்கை படத்தை முதல் நாள் பார்த்து இருக்கேன் , இந்த படத்தை முதல் நாள் பார்க்க முடியல , அதனால சொல்லுறேன்  நீங்க இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாம பாருங்க , ஒரு நெத்தி அடி படம் , எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாம , மனதார  உருகி பாராட்டப்படவேண்டிய படம் ,இந்த வருஷத்தில் வந்த அருமையான படங்கள் வரிசையில் இந்த படம் ஒரு முக்கியமான படம் , எனக்கு இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில்  குரங்கு பொம்மை , ஒரு கிடாயின் கருணை மனு , லென்ஸ் , மாநகரம் இந்த வரிசையில் இதுவும் ஒன்று ஆனால் மற்ற படங்கள் எல்லாம் பெரிய நட்சித்திரம் இல்லாத படம் , ஆனால் இது நயந்தாரா என்ற ஒரு பெரிய ஹீரோ வச்சி எடுத்துஇருக்காங்க , இந்த வருஷம் வந்த பெரிய ஹீரோ படங்களில் இது தான் பெஸ்ட் , என்னடா நயன்தாராவை ஹீரோன்னு சொல்லுறிய பார்க்கறீங்களா ? ஆமாங்க நிச்சயமா அவங்களை ஹீரோ என்று சொல்லலாம் .

நம்ம மனசில் இருப்பதை கிழி கிழி கிழிச்சிருக்காங்க , படத்தின் கதை நடக்கும் இடமே அருமையான தேர்வு , ஒரு பக்கம் விண்வெளிக்கு ராக்கெட் விடும் இடம் , அதன் அருகே குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு இடத்தில் இந்த கதை நடக்குது, நிறைய சின்ன சின்ன விஷயங்கள் படத்தில சொல்லி இருக்காங்க , விளம்பரத்துக்காக போட்டோ எடுத்து போடப்படும் போலியோ சொட்டு மருந்து, தங்கள் வாழ்க்கை தரம் உயராத மக்கள், நம் நாடு ராக்கெட் விட்டா நமக்கு பெருமைன்னு அது நல்லா நடக்கணும் சாமிகிட்ட வேண்டுவது , எது எதுக்கோ 1000 கோடி செலவு பண்ணாலும், குழில வீழ்ந்த குழந்தையை காப்பாற்ற வெறும் கயிறு தான் நமக்கு மிச்சம் என்ற  நிலைமை காட்டுவது , ஆரஅமர விபத்து நடந்த இடத்துக்கு செல்லும் அதிகாரிகள் , ரிப்பேர் ஆகும் தீயணைப்பு வாகனம் இப்படி சின்ன சின்ன விஷயங்கள் காட்டி இருக்காங்க.

படத்தின் மிக பெரிய ப்ளஸ் நாமே அந்த இடத்தில இருப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நம் பிள்ளையே அதில் மாட்டிகொள்ளுவது போல ஒரு உணர்வு இருக்கு , அந்த உணர்வு நமக்கு ஜிப்ரான் bgmல்  நமக்குள்ள இறக்கிட்டார். தோரணம் ஆயிரம் பாடல் விஜயலக்ஷ்மி குரலில் ultimate ஆகா இருக்கு ,இன்னும் இந்த படத்தை பற்றி சொல்லலாம் ஆனால் அதை எல்லாம்  போயிட்டு படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க .

அந்த குழந்தையின் அம்மா அப்பாவாக நடிச்சவங்களுக்கு  ஒரு  பெரிய கைத்தட்டு , அப்புறம் நயன்தாரா அருமையாக நடிச்சி இருக்காங்க , அந்த கடைசி சில உணர்வுபூர்வமான காட்சிகளில் சூப்பர், நயன்தாரா கேரக்டர் வடிவமைச்ச டைரக்டர் கோபி நயினார்  பாராட்டி ஆகணும் , ஏன்னா நயன்தாரா என்பதால் மாஸ் காட்டுவது , build up பண்ணுவது எதுவும் இல்லாமல் , கதைக்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்து இருக்காங்க .

இந்த படத்தில மைனஸ்ன்னு எனக்கு சொல்ல தோன்றவில்லை , நடுவுல நடுவுல வரும் அந்த டிவி விவாத மேடை ஷோ கொஞ்சம் வந்து இருந்த நல்லா இருந்து இருக்கும் , ஆனால் அடிக்கடி வருவது கொஞ்சம் bore அடிச்சது போல  தோணுச்சு .

ஒரு படம் பார்த்தா  அதன் பாதிப்பு படம் பார்த்து வெளியே வந்து ரொம்ப நேரம் இருக்கும் , அப்படி ஒரு பாதிப்பு இந்த படம் நிச்சயம் நமக்கு ஏற்படுத்தும் , ஆளும்கட்சி , எதிர்க்கட்சி , மத்திய கட்சிகள் , மாநில கட்சிகள், ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் , கட்சி ஆரம்பிக்க  வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும்   இந்த படத்தை பார்த்துட்டு கண்ணாடி முன்னாடி நின்று நீங்களே காரித்துப்பிக்கோங்க , மசாலா கலந்து கொஞ்சம் கருத்து கொடுத்த மெர்சல் படத்துக்கு இந்திய அளவில் நியூஸ் சேனல் எல்லாம் ட்ரெண்ட் பண்ணிவிட்டாங்க , ஆனால் இந்த படத்தை நிச்சயமா அபப்டி ட்ரெண்ட் பண்ணிவிடனும் .

இந்த படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட வேண்டும் , எந்த மொழியிலும்  டப்பிங் செய்து வெளியிட்டால் செம்ம ஹிட் அடிக்கும் , நிச்சயமா இந்த படத்திற்கு விருதுகள் குவிய வேண்டும் , நிச்சயமா இந்த வருஷம் தேசிய விருது ஹிந்தி ல வந்த toilet படத்துக்கு கொடுப்பாங்க , அதே போல இந்த படத்துக்கும் விருது தந்தே ஆகவேண்டும் , அப்படி எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக அது ஒரு சதியாக தான் இருக்க வேண்டும் .

குறிப்பு : கத்தி படத்தின் கதை என்னுடையது என்று கூறியவர் தான் இந்த படத்தின் டைரக்டர்  கோபி நயினார். கத்தி வந்துவிட்டதால் அதை மாற்றி அமைத்து வந்தது தான் இந்த அறம் .


மொத்தத்தில் அறம் ஒரு தரமான படம்.

இப்படிக்கு

சினி கிறுக்கன் 

Friday, 10 November 2017

Nenjil Thunivirunthal - நெஞ்சில் துணிவிருந்தால்இந்த படத்தை பற்றி சொல்லணும்ன்னா இந்த  படம் ட்ரைலர் போலவே சொல்லணும்
சுசீந்திரன் படம்ன்னா நிச்சயமா இம்மான் இசை இருக்கும்,  அப்புறம்? சூரி இருப்பார், அப்புறம்? அம்மாவாக துளசி இருப்பாங்க, இவர் சின்ன ஹரி போல ஏன்னா படத்தில ஸ்கெட்ச் போடுவாங்க , அப்புறம் ?  குடும்ப செண்டிமெண்ட் இருக்கும் ,  அப்புறம்?  நட்புக்கு மரியாதை  இருக்கும் ,அப்புறம்? நைட் சேசிங் இருக்கும் ,   கொஞ்சம் காதல் இருக்கும் , கொஞ்சம் மசாலா தூவி சமாளிச்சி இறக்கிவச்சிடுவார் 

படம் ஆரம்பிச்சி இன்டெர்வல் வரைக்கும் கொஞ்சம் கூட  திரைக்கதை கதைக்குள்ள போகல , ஆனால் கதைக்கு தேவையானதை படத்துக்குள்ள கொண்டுவருவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டு , முதல் பாதி எப்படியோ போகுது , வில்லனோட முதல் காட்சி அவர் எப்படிபட்டவர்ன்னு காட்டுவது நல்லா இருந்துச்சி , பிறகு ஹீரோ சந்தீப் , விக்ராந்த் பற்றி , சந்தீப் தங்கச்சி மற்றும் விக்ராந்த் காதல் , அவங்க அம்மா, முக்கியமான வில்லன் மட்டும் இல்லாமல் , சின்ன சின்ன வில்லன்கள் பற்றி  இப்படி ஒரு ஒருத்தர் பற்றி சொல்லி சொல்லி படம் இன்டெர்வல் வந்துடுச்சி , அட இதுக்கு நடுவுல ஹீரோயின் வேற ,

அப்படி , இப்படின்னு எப்படியோ முதல் பாதி போனாலும், ரெண்டாவது பாதி ஒரு வேகம் கொடுத்து படத்தை கரை சேர்த்துட்டார் டைரக்டர் சுசீந்திரன் ,சில இடங்கள் ஒரு சாதாரண ரசிகன் கூட கணிக்கும் அளவுக்கு திரைக்கதை இருக்கு , ஆனாலும் இது எல்லாம் எதுக்காக நடக்குது என்பதை நமக்கு தெரிஞ்சிக்க விடாமல் , நம்மை கடைசி வரைக்கும் யோசிக்கவச்சியிருக்கார் , இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்றார் போல கந்துவட்டி , ரியல் எஸ்டேட் பிரச்சனை, இப்படி சில விஷயங்கள் அப்படியே நூல் இழையாய் ஓட வச்சி ,கொஞ்சம் கடைசியாய் கதையின் கருவை உடைத்து ,விறுவிறுப்பாய் முடிச்சிட்டார் .ஆனால் படம் பார்க்கும் போது கொஞ்சம் பாண்டியநாடு , பாயும் புலி பார்த்தது போல இருந்துச்சி 


படத்தின்  ப்ளஸ் வில்லன் ஹரிஷ் உத்தமன் தான்  ரொம்ப நல்லா பண்ணிருக்கார் ,அதுக்கு சரியாய் bgm மியூசிக் அவருக்கு இம்மான் பக்காவாக கொடுத்துட்டார் , ஆனால் அந்த இசை கொஞ்சம் முன்னாடி ஏதோ இம்மான் படத்தில பயன்படுத்தியது போலவே தான் இருந்துச்சி .

படத்தின் மைனஸ் ஏற்கனவே சொன்னது போல அழுத்தம் இல்லாத முதல் பாதி , மொக்க சூரி காமெடி ,ஹீரோயின் எதுக்காக அவங்களை படத்தில் போட்டாங்க என்று தெரியவில்லை கொஞ்சம் அழகாக இருக்காங்க ஆனால் சுத்தமா பேசவே தெரியல டப்பிங் ரொம்ப கேவலமா இருந்திச்சி, சும்மா கெஸ்ட் ரோல் அவளோதான் , அவங்க ஹீரோ சந்தீப் கூட வரும் காட்சிகள் கூட ரொம்ப கம்மி தான் .

என்னடா படத்தை பற்றி ரொம்ப கம்மியா சொல்லி இருக்கன்னு கேட்பீங்க நினைக்கிறன் , இந்த படத்துக்கு இந்த அளவுக்கு தான் எனக்கு எழுத தோணுச்சு, ரொம்ப ஓஹோன்னு புகழுவதற்கும் , இல்ல ஓஹோன்னு கலாய்ப்பதற்கும்  இல்ல .

மொத்தத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் இன்னும் கொஞ்சம் துணிவிருந்துயிருந்தால் மக்கள் நெஞ்சில் விருந்துபடைதிருக்கும் 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


Friday, 3 November 2017

Aval - அவள்

இந்த படத்தை பற்றி டக்கு டக்கு டக்குன்னு சொல்லிடனும் நினைக்கிறேன் , ஏன்னா படம் அப்படி தான் டக்கு டக்குன்னு போகுது 

படத்தின் கதை என்ன சொல்லணும் ? 
நம்ம எப்பொழுதும் எதிர்பாக்கிற ஒரு பேய் கதை தான் , ஒரு பேய் இருக்கும் , அது வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கும் , ஒரு பிளாஷ் பேக் இருக்கும் , பிறகு அது பழிவாங்கும் , இல்லாட்டி ஒரு நல்ல பேய் , கெட்ட  பேய் இருக்கும், இந்த படத்தில கதை ஒரு வழக்கமான ஒரு formulaவில் தான் இருக்கு, ஆனால் அதை கொடுத்த விதம் ரொம்ப அருமையா இருக்கு .

 கொஞ்சநாளாக  பேய் படத்தில் வரும்   லூசு தனமான ஹீரோயின் , ஒரு மொக்க பாட்டு , மொக்க காமெடி , எலுமிச்சை பழம் வச்சி வரும் ஒரு சாமியார் , சுடுகாடு அது இதுன்னு , லொட்டு லொசுக்குன்னு வரும் பேய் படம் போல இல்லமால் , படத்தின் கதையில் இருந்து கொஞ்சம் கூட விலகி போகாமல் , பேய் படம்ன்னா பேய் பேய் படம்  போல, பார்க்கிற நம்மை அந்த உணர்வு தந்து இருக்காங்க , ரொம்ப நாள் கழிச்சி ஒரு அருமையான , உண்மையான பேய் படம் தமிழில் வந்து இருக்கு,

படத்தின் ப்ளஸ் நடிகர்கள்  சித்தார்த் , ஆண்ட்ரியா , ஜெனியாக நடிக்கும் அனிஷா , அந்த குட்டி பொண்ணு , அதுல்குல்கர்னி , பாதிரியார் , இப்படி எல்லோரும் சரியாக அளவாக நடிச்சி இருக்காங்க , எந்த ஒரு கதாபாத்திரத்தையும் அதிகமாகவோ , குறைத்தோ தராமல் , எல்லோருக்கும் சமமாக  கொடுத்து இருக்காங்க , அதை அவர்களும் சரியாக நடிச்சிருக்காங்க . அதே போல படம் நடக்கும் களம் நல்ல வித்தியாசமான இடம் கொடுத்து இருக்காங்க , இமயமலை ஒட்டி நடக்கும் இடம் , அதை பனிமலை பின்னணியில் நல்லா கொடுத்து இருக்காங்க 

படத்தை மனசில் நிறுத்திவைத்தது  கேமரா , சவுண்ட் தான் , பேய் படத்துக்கு தேவையான அனைத்தயையும்,  பக்காவாக இவங்க ரெண்டு பேரும் பண்ணி இருக்காங்க .  அந்த வீடு அருமையாக இருக்கு , நல்லா செட் பண்ணிருக்காங்க , அந்த லொகேஷன் , வீடு , அளவாக பேசும் நடிகர்கள் பார்க்கும் போது , அட நம்ம ஆளுங்க கொஞ்சம் இங்கிலிஷ் படம் சாயலில் ஒரு பேய் படம் எடுத்து இருக்காங்கன்னு நல்லாவே சொல்லலாம் , அதுக்கு  இவங்களுக்கு ஒரு சபாஷ் போடலாம் .

படத்தில இன்டெர்வல் சீன சூப்பர் , படத்தின் கிளைமாக்ஸ் வந்தது போல ஒரு feel இண்டெர்வெளில் கொடுத்து இருக்காங்க , படத்தின் கடைசியில் ஒரு நல்ல ட்விஸ்ட் வரும் அது தான் செம்ம , நல்ல யோசிச்சி , யாருக்கும் சந்தேகம் வராத மாதிரியே screenplay அமைச்சதுக்கு ஒரு நல்ல கைத்தட்டு . படத்தில எனக்கு பிடிச்ச காட்சின்னா , ஒரு இடத்தில கேமரா கதவு லாக்க்குள்ள எல்லாம் ட்ராவல் பண்ணிட்டு போகும் , அப்படியே தலைகீழாக வரும் காட்சிகள்  , அதை தொடர்ந்து வரும் காட்சிகள் சூப்பர்.

நீங்க உண்மையாக நல்ல பேய் படம் பார்க்கணுமான்ன நிச்சயமா தியேட்டர்ல போயிட்டு நல்ல சவுண்ட் effect  உள்ள தியேட்டர்ல போயிட்டு பாருங்க . அது நிச்சயமா ஏமாற்றம் தராது . இங்கிலிஷ் பேய் படம் பார்த்த ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நிச்சயமா மற்ற மொழிகளும் இந்த படம் போகும் .

மொத்தத்தில் அவள் பார்ப்பவர்களை நல்ல மிரட்டுபவள் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


Wednesday, 18 October 2017

Mersal - மெர்சல்

மெர்சல்ன்னு பெயர் வைச்சாலும்  வைச்சாங்க, படம் ரிலீஸ் ஆவதில் ரொம்ப மெர்சல் பண்ணிட்டாங்கபா , டிக்கெட் ரேட் பிரச்சன்னை , சென்சார் certificate பிரச்சன்னை , ஒரு வழியா டிக்கெட் கிடைச்சி கூட்ட நெரிசலில் மெர்சல் போயிட்டு பார்த்தாச்சி .

வழக்கம் போல நான் ஒன்னு சொல்லிடுறேன் , நான் தல ரசிகனோ , தளபதி ரசிகனோ இல்ல, நான் ஒரு சினிமா ரசிகன்.அப்போ தான் யார் கிட்டேயும் அடிவாங்காம   இருக்கலாம் .

சரி இந்த படத்தை பற்றி சொல்லணும்ன்னா , ஒரு கமெர்சியல் படத்துக்கு என்னவெல்லாம் இருக்கணுமோ,  அது எல்லாம் சரியா இருக்கு இந்த படத்தில , அதுவும் அட்லீக்கு அது சரியான  அளவாக கலந்து கொடுப்பதில் கைவந்த கலை .அதை இதில் கொடுத்து இருக்கிறார் .வழக்கமான அப்பா , ரெண்டு பையன் கதை தான், இருந்தாலும், அதை ரசிக்கும்படி கொடுத்து இருக்கிறார் , அவர் கிட்ட ஒரு ப்ளஸ் பாயிண்ட், தமிழ் சினிமாவில  அரைச்ச மாவையே அரைத்தாலும் , அதை புளிக்காத மாதிரி கொடுப்பது தான் அவரின் மகிமை . அதே போல தளபதியை சரியாக கை ஆளுவதில் சரியான ஆளு அட்லீ தான் .

தளபதி பற்றி என்ன சொல்லுவது , மனுஷனுக்கு வயசு ஏறுதா இல்ல குறையுதா ? செம்ம மாஸ் , செம்ம அழகா இருக்கிறார் , பயங்கர fit ஆக இருக்கிறார் , screen presence சூப்பர் , துப்பாக்கி , கத்தி , தெறி இப்போ இதில் நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன் , அந்தளவுக்கு சூப்பராக இருக்கிறார் , அவரை அப்படி காட்டிய கேமராமேன் , டைரக்டர்  எல்லோருக்கும் ஒரு கைத்தட்டு , மூன்று கேரக்டர்களும் பக்கா மாஸ் ,அதுவும் முதலில் பாரிஸ்ல் டாக்டர்  தளபதிகிட்ட டீல் பேசும் போது , அதுக்கு தளபதி பதில் தரும் காட்சி  சும்மா வச்சி செஞ்சியிருக்கிறார் , தியேட்டர்ல கைத்தட்டு அள்ளுது .இது போல நக்கல் மற்றும் மாஸ் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும்படி வச்சி கைத்தட்டு அள்ளுது , எனக்கு பிடிச்ச விஷயம்ன்னா விஜய் இந்த படத்தில் தேவை இல்லாம பஞ்ச் வசனம் பேசாம , அவரோட முந்தைய படங்களில் காமெடி பேருல பண்ணும் ஓவர் ஆக்ட்டிங் எல்லாம் பண்ணாம , டைரக்டர் சொன்னதை செஞ்சி இருக்கிறார் , டைரக்டர் அவரை சரியா பயன்படுத்தினா நிச்சயமா அவர் படம் நல்லா போகும் , அதை அட்லீ இதுலயும் பண்ணி இருக்கிறார் .கதைக்கு ஏற்ற சரியான மாஸ் , அளவுக்கு அதிகமா build up தராமல் தந்து இருப்பது ஒரு பெரிய சபாஷ் .மேலும் இப்போ இருக்கும் சமுதாய பிரச்சன்னைகளை எல்லாம் கலாய்ப்பது சூப்பர் .

எஸ்.ஜே. சூர்யா வளரும் வில்லனாக வருகிறார், வில்லனுக்குரிய பத்து பொருத்தமும்  பக்காவாக இருக்கு, அதே நேரத்தில்  அவர் தான் முக்கியமான கேரக்டர் என்றாலும் , ஆனால் இந்த படத்தில் அவரை இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாமோ தோணுச்சு , விஜயும் , சூர்யாவும் மோதும் காட்சிகள் கம்மியாக இருந்துச்சி ,

மீண்டும் வடிவேலு வந்து ஒரு அளவுக்கு மக்களை திருப்திபடுத்தி இருக்கிறார் 
படத்தில் மூன்று ஹீரோயின்கள் அல்ல , ஒரே ஒரு ஹீரோயின் தான் அது நித்யாமேனன் மட்டும் தான் சொல்லணும், அவங்க தான் படத்தின் கதைக்கு நல்ல அடித்தளம், மேலும் நல்லா நடிச்சி இருக்காங்க , மற்ற இருவரும் சும்மா வந்து ஆளுக்கு ஒரு பாட்டு பாடிட்டு போய்ட்டாங்க , சமந்தா வரும் காட்சிகள் கூட ரசிக்கும்படி இருக்கு அந்த ரோஸ்மில்க் காட்சிகள் எல்லாம் , ஆனால்  காஜல் நடிக்கிறது ரொம்ப செயற்கையாக இருக்கு , அவங்க கேரக்டர் படத்திற்கு ஒட்டவே இல்லை ,  அவங்க விவேகம் படத்திலும்  சரி இந்த படத்திலும் சரி அபப்டி தான் செய்யறாங்க.

இசைபுயல் பாட்டை பற்றி நான் சொல்லனும்னா? , ஏற்கனவே ஹிட் , சும்மா எறக்கி விட்டுஇருக்கிறார் , பாட்டின் காட்சியமைப்பும் அருமை, பாடல் காட்சியில் அவரோட குரு ஷங்கர் ஞாகபம் படுத்துகிறார், பாடல் மனசில் பதிஞ்ச அளவுக்கு bgm வாவ் சொல்ல வைக்கல , ஒரு சில இடங்களை தவிர, ஒருவேளை பாட்டு மட்டும் போட்டு கொடுத்துட்டு, bgm அவரோட assistant கிட்ட கொடுத்து போடச்சொல்லிட்டாரோ ? ஷங்கருக்கு தான் முழுசா போடுவேன் , அவரோட அசிஸ்டன்ட் தானே  என்று தோணுச்சோ ?  ஏன்னா அவரோட படத்தில ரொம்ப தனிச்சியாக இருக்கும், ஆனால் சில இடங்கள் எல்லாம் கேட்டா, இப்போ நிறைய பேரு வந்து இருக்காங்க அவர்களில் யாரோ போட்டா மாதிரி ஒரு உணர்வு எனக்கு வந்துச்சி .

படத்தில சில பல மைனஸ்கள் இருக்கு , படத்தில முதல் பாதி ஒரு வேகம் விறுவிறுப்பு , இரண்டாவது பாதியில் இல்ல , அப்பா விஜய்க்கு மாஸ் இருந்தாலும் அந்த பிளாஷ் பேக் ரொம்ப நேரம் இழுப்பது போல இருந்துச்சி , விஜயும் , சூர்யாவும் மோதும் காட்சிகள் பிளாஷ் பேக்கிலும் சரி , பிளாஷ் பேக் முடிஞ்ச அப்புறம் பசங்க எஸ்.ஜே சூர்யாகூட மோதும் காட்சிகளும் சரி , ரொம்ப கம்மியா இருக்கு , நிச்சயமா எல்லோரும் சொல்லுவது போல எனக்கும் இந்த படம் ரமணா படத்தில் இருந்து ஒரு பகுதியை கதையை எடுத்து பண்ணிஇருப்பார் போல , சமந்தா கேரக்டர் கஜினி அஸினை ஞாபகம் படுத்தியது, டீஸர் பார்க்கும் போதே நிச்சயமா கோவை சரளா விஜய்க்கு அம்மாவாக இருக்க மாட்டாங்கன்னு தெரியும், அதுபோலவே படத்திலும் இருக்கு , கோவை சரளாவுக்கு  விஜய் எப்படி கிடைச்சார்ன்னு தெரியல, தளபதியை டீவில பார்த்த எஸ்.ஜே. சூர்யாவால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுது, ஆனால் அவர் கூடவே இருக்கிற டாக்டர் அர்ஜுன் ஏன் பாரீஸ்ல விஜயை பார்த்து  கண்டுபிடிக்க முடியல ? பொதுவா commercial படத்தில லாஜிக் கேட்க கூடாது , ஆனால் அப்பட்டமாக லாஜிக் மிஸ்ஸிங் படத்தில இருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாக தான் இருந்துச்சி .சத்யராஜ் , சத்ரியன் , காஜல் , சமந்தா வந்துட்டு அபப்டியே காணாம போய்ட்டாங்க .எதிர்பார்த்த கதையமைப்பு , இறுதியில் வரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்கள் எல்லாம் வழக்கம் போல தான் .hospitalன்னு துரைப்பாக்கம் chennai one building காமிச்சிட்டாங்க .

ஆனால் ஒன்னு சொல்லியே ஆகணும் , இந்த விஜய் எதிர்ப்பாளர்கள் சொல்லுவது போல படம் ஒன்னும் அந்தளவுக்கு மொக்கை இல்ல , அதே நேரத்தில விஜய் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு சூப்பர் டூப்பரும் இல்ல , ஒரு சாதாரண ரசிகனுக்கு இந்த படம் bore அடிக்காம போகும் . என்னை பொறுத்தவரை இது பைரவா விட above average படம் .

என்ன ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்த ஒரு படத்துக்கு ஒரு குரூப் hard work டா , ஹாலிவுட் டா, ஹிட் டான்னு, 100 கோடி collection டான்னு சொல்லி மார்தட்டிக்கிட்டாக, இப்போ ஒரு குரூப் message டா , மாஸ் டா , 100 கோடி  collection டான்னு  சொல்லிப்பாக  அவளோதான் .

மொத்தத்தில் மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு மட்டும்  நல்ல பார்சல் ,  கதை அனைவருக்கும் தெரிஞ்ச கரிசல், திரைக்கதையில் இருக்கு விரிசல் .டிக்கெட் விலையால் எனக்கு கொஞ்சம் நெரிசல்

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .

Saturday, 30 September 2017

Karuppan - கருப்பன்

கருப்பன் இந்த படம் போஸ்டர் எல்லாம் பார்த்துட்டு பொங்கல் அப்போ ரிலீஸ் ஆகி இருக்கலாமேன்னு தோணுச்சு , ஆனால் இந்த படம் அந்த போஸ்டர்க்கும் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்ல , அதே நேரத்தில அட ரொம்ப நாள் கழிச்சி ஒரு கிராமத்து கதை வந்து இருக்கே , நல்ல குடும்பத்தோட பார்க்கலாமே சொல்லணும் தோணுச்சு அப்படியும் இந்த படம் இல்ல ,  படம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதை , அதை அழுத்தமாகவும் சொல்லவில்லை , புதுசாக திரைக்கதையும் அமையவில்லை , காதல் , பாசம்ன்னு நல்லா இருக்கும்னு பார்த்தா , ஒரு அளவுக்கு மேல அந்த காதல் பாசம் பார்க்க முடியவில்லை , ரொம்ப திகட்ட திகட்ட கொடுத்து இருக்காங்க .படம் சீரியல் பார்ப்பது போல இருக்கு .

படம் பார்க்கும் போது , கொஞ்சம் தர்மதுரை , கொம்பன் , மருது , பருத்திவீரன் இந்த படங்கள் எல்லாம் ஞாபத்துக்கு வருது , படம் ஆரம்பிச்ச சில நிமிடங்களில் , இந்த கதை இப்படி தான் போகும்ன்னு தெரிஞ்சிடுச்சி , ஆனால் அதை சுவாரஸ்சியமா கொடுத்து இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சி , அது போக போக அட போங்கபா , இப்படியே படம் எவ்வளவு நேரம் போகும்ன்னு கேட்க தோணுது,

இந்த அளவுக்கு படம் கொஞ்சம் bore ஆகா போனாலும் சரி , படம் காட்சிக்கு காட்சிக்கு கொஞ்சம் மனசை தெம்பு ஏற்றுவது , நம்ம விஜய் சேதுபதி தாங்க , அசால்ட்டாக மனுஷன் நடிச்சி தள்ளிட்டு போய்கிட்டே இருக்கார் , கதை நல்லா  இருக்கோ இல்லையோ , படம் மக்களுக்கு பிடிக்குமோ இல்லையோ , அதை பற்றி எல்லாம் கவலைப்படமா , அவர் அவரோட வேலையை சரியாய் செஞ்சிட்டு போகிறார், ஒரு விஷயம் சொல்லணும்ன்னா அவர் இது போலவே பல படங்களில் நடித்தாலும் , என்னயா ஒரே மாதிரி நடிக்கிறார்ன்னு சொல்ல தோணல , ஏதோ ஒரு மந்திரம் போட்டு ரசிகர்களை கட்டி போட்டுவிடுகிறார், ஏன்னா இந்த படத்தில குடிச்சிட்டு நல்லா அட்டகாசம் பண்ணும் போது எல்லாம் தர்மதுரை ஞாபகம்படுத்துகிறது , எனக்கு பிடிச்ச காட்சின்னா கல்யாணம் முடிச்ச பிறகு , முதல் நாள் வேலைக்கு போனபிறகு எல்லோரும் சேதுபதி பற்றி தப்பா சொல்லுவாங்க , அன்று இரவு அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தபிறகு ஹீரோயின் தன்யாவுக்கு அவருக்கும் ஒரு பேச்சு நடக்கும் அது ரொம்ப நல்லா இருந்துச்சி , ஆனால் போக போக அது போல பல காட்சிகள் வருது , அது கொஞ்சம் ஏன்டான்னு கேட்க தோணுச்சி .

பாபி சிம்ஹா டைரக்டர் நல்லா பில்டப் கொடுத்து இருக்கார் , ஆனால் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இல்லை , building strong ஆனால் basement weakன்னு சொல்லுறா மாதிரி இருக்கு , இவர் போதாதுன்னு இன்னொரு வில்லன் சரத் , ரொம்ப வழக்கமான சாதாரணமான போகுது ,

இசை இமான் அவர் ஒரு படம் ரொம்ப நல்லா பண்ணா அடுத்து சில படங்கள் சுமாரா போடுவார் , அது போல இதுவும் சுமார் ரகம் , சில படங்கள் அவரோட படங்களை ஏற்கனவே கேட்டது போல பாடல்கள் இருந்துச்சி .

எனக்கு ஒரே ஒரு வருத்தம் , ஏன் அப்போ அப்போ விஜய்சேதுபதி நடுவுல நடுவுல இப்படி ஒரு படம் தருகிறார்ன்னு தெரியல , போன வருஷம் ரெக்கை , இந்த வருஷம் கருப்பன்


மொத்தத்தில் கருப்பன்  கொஞ்சம் கருத்துவிட்டான் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

Friday, 29 September 2017

Hara Hara Mahadevaki - ஹர ஹர மஹாதேவகி

என்னோட சினி கிறுக்கன் பக்தாளுக்கு  எல்லாம் ஒரு சின்ன வேண்டுகோள் ,ஹர  ஹர  மஹாதேவகி  இந்த படம் எப்படி இருக்கும் ? , முதலில் நீங்க அந்த ஹர  ஹர  மஹாதேவகி  ஆடியோ கேட்டு இருந்தா நிச்சயமா இந்த படம் எப்படிபட்ட படம்ன்னு உங்களுக்கு தெரியும் ,  கேட்காதவங்க உடனே கூகிள் பண்ண போய்டுவீங்களே. டேய் இது எல்லாம் எவனாவது கேட்க்காம இருப்பானா  அப்படின்னு கேட்கிற பக்தாளோட  மைண்ட் வாய்ஸ் கேட்குது , அப்படியும் சிலர்  இந்த உலகத்துல  இருக்காங்க, அவங்களுக்கு தான் அந்த disclaimer 

முதல் முதலா  என்னோட reviewக்கு நானே  A  certificate  கொடுத்துக்கிறேன் , ஏன்னா படிச்சிட்டு என்ன திட்டாதீங்க , இந்த படம் only for adults  சொல்லியே தான் ட்ரைலர் போட்டாங்க , படமும் அதுக்கு எந்த விதத்திலும் கொஞ்சம் கூட குறையில்லாம  audienceயை  திருப்திபடுத்திருக்கு, அதாவது  அப்போ படத்தில கில்மா காட்சி நிறைய இருக்கானு பக்தாள் ஜொள்ளு விடுவது தெரியுது , அப்படிப்பட்ட காட்சி எல்லாம் படத்தில இல்ல, வெறும் காமெடி  மட்டும் தான், நம்ம சினிமாவுல black காமெடி படம்ன்னு சில படங்களை சொல்லுவாங்க , ஆனா இந்த படம் open காமெடி படம் அவளோதான் சொல்லுவேன் , அதனால வீட்டுல இருக்கவங்களோட படத்துக்கு போயிட்டு கீழே காசு போட்டு சமாளிக்கலாம் நினைக்காதீங்க , ஏன்னா இந்த படத்தில நீங்க காது தான் மூடனும் , அபப்டி இருக்கும் வசனங்கள் . 

படத்தில்  கதை  என்னன்னு கேட்காதீங்க , லாஜிக் எங்கன்னு கேட்காதீங்க  அபப்டின்னு அவங்களே  disclaimer போட்டுட்டாங்க , அப்பறம் என்ன ______ க்கு டா review பண்ண போறேன்னு கேட்ப்பீங்கன்னு தெரியுது , யூடியூபில  review  பண்ணறவங்களையும் படத்தோட டீம் ரொம்ப கேவலமா பச்சையா  ஒரு வீடியோ போட்டு  மரணபங்கம் பண்ணிட்டாங்க , அதனால அதை பற்றி ஒன்னும் சொல்ல முடியாது .

படத்தில சின்ன கதை என்னனா   ஒரே மாதிரி பை , ஒரு பையில bomb  இருக்கு , ஒரு பையில கள்ளநோட்  இருக்கு , இன்னொரு பையில  காதல் break up அதனால , காதலி கொடுத்த gifts வச்ச பை  (குறிப்பு : அதுல angry birds  போட்ட ஜட்டி ) ஆள் மாறாட்டம் போல பை மாறாட்டம் நடக்குது , அதனால வரும் குழப்பங்கள் அவளோதான் இந்த படத்தோட கதை , இதையும் அவங்களே யூடியூபில்  promotion போட்டுட்டாங்க .

படத்தின்  மைனஸ்  முதல் 30-40 நிமிடங்கள் , ஒரு ஒரு கேரக்டர் காட்டி , அவங்க படத்தில் செட்டில் ஆக்குவதற்கு டைம்  எடுக்குது , வழக்கம் போல கொஞ்சம் சம்மந்தம் இல்லாமல் வரும் பாடல்கள் படத்தின் இன்னொரு மைனஸ் , முதல் பாதியில் கொஞ்சம் கொஞ்சம் காமெடி அங்க அங்க வச்சி ஏதோ கொஞ்சம் சமாளிச்சு இன்டெர்வலலில் கொண்டு வந்து சேர்த்துட்டாங்க ,

 அப்பறம் இரெண்டாவது பாதியில் முதல் சில நிமிடங்கள்  தட்டு தடுமாறி ஆரம்பிச்சி , அப்படியே ஒரு ஸ்பீட் எடுத்து  காமெடியின் உச்சத்துக்கு போயிட்டு சந்தோஷமா படத்தை முடிக்கிறாங்க , நிச்சயமா படத்தின் கடைசி 30-40 நிமிடங்கள் அடங்காம சிரிப்பீங்க 

ஹீரோ கௌதம் கார்த்திக் , ஹீரோயின் நிக்கிகல்ராணிக்கு  ஸ்கோப் கம்மி தான் , படத்தின் ஹீரோன்னு பார்த்தா , சதிஷ் , மொட்டை ராஜேந்திரன் , கருணாகரன், ரவிமரியா , படத்தை தூக்கி நிறுத்துவது இவங்க நாலுபேரும் தான்(படம் பார்த்தா புரியம்)  , நடுவுல பாலசரவணனும் இருக்கார் , கதையின் குழப்பத்துக்கு அவரும் ஒரு காரணம் இருந்தாலும் , சிரிப்பு வரவைப்பது அந்த நாலு பேரும் தான் .படத்தில நிறைய highlight சீன்ஸ் இருக்கு ஆனா அது எதுவும் இங்க எழுத முடியாது , படம் பார்த்து சிரிச்சிகோங்க 

படத்தின் பெரிய ப்ளஸ் இந்த படம்  A  certificate தான் இருந்தாலும் பெண்களை எங்கேயும் கேவலமாகவோ , மட்டமான பெட் ரூம் சீன்களோ , ஹீரோயின் க்ளாமராகவோ , மட்டமான ஐட்டம் பாட்டு வச்சி அறை குறையா ஆட்டமோ இல்லை , படத்தில் இருப்பது வசனங்கள் மட்டும் தான்  , double meaning , triple meaning  வசனங்கள் எல்லாம் இல்ல , straight forward வசனங்கள் தான் , பச்சை பச்சையா இருக்கும் , இப்போ புரியுதா நான்  ஏன் review full பச்சையா எழுதியிருக்கேன்ன்னு 

இசை பாலமுரளி பாலு  ஹர  ஹர  மஹாதேவகி பாடல் தவிர மற்ற பாடல்கள் & , bgm  சுமார்  தான் 

நிச்சயமா இந்த மாதிரி ஒரு படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும் , இதை கதையாய் எழுதி , ஒரு producer பிடிச்சி அவரை convince பண்ணி , சென்சார் வாங்கி , யூடியூபில் ப்ரோமோஷன் பண்ணி கொண்டுவந்ததுக்கு டைரக்டர்க்கு ஒரு பெரிய தைரியம் தான் .

நிச்சயமா இந்த படத்துக்கு  இந்த இங்கிலிஷ் websites , நியூஸ் papers பலர் ஒரு ஸ்டார் , ரெண்டு ஸ்டார் தான் reviewல்   கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன் , ஆனால் நீங்க ஒரு 2 மணி நேரம் எல்லா கவலைகளையும்  மறந்துட்டு நல்லா சிரிச்சிட்டு வர வேண்டும்ன்னா இந்த படத்தை பாருங்க, உங்களை திருப்திப்படுத்தும் .எனக்கு  90களில் வந்த சுந்தர்.சி படம் பார்த்த உணர்வு 

உங்களுக்கு இந்த படம் பிடிக்கலைன்னா நிச்சயமா மனதளவில் நீங்க வயசு ஆயிடுச்சின்னு சொல்லணும் ,  இல்லனா, நீங்க current ட்ரென்ட்க்கு இல்லன்னு அர்த்தம் .

இந்த படம் just for laughs,   கலாச்சார சீரழிவுன்னு யாரும் கொடி தூக்காதீங்க .

டைரக்டர் : சந்தோஷ்  பி  ஜெயக்குமார் 
இசை : பாலமுரளி பாலு
தயாரிப்பாளர் : தங்கராஜ் 
கேமராமேன் : செல்வகுமார் 
என்னடா புதுசா கேமராமேன் , producer பேரு எல்லாம் போடுறானே தோணுதா , ஆமாங்க  இப்படி ஒரு படத்தை  யார் எடுத்தாங்கன்னு பின்னாடி வரும் சந்ததையர்கள் தெரிஞ்சக்க வேண்டாமா  அதான் .


மொத்தத்தில் ஹர  ஹர  மஹாதேவகி பஜனை நல்லாவே பண்ணி இருக்காங்க .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .